வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை? – டிடிவி தினகரன்

அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 5-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது போலீஸில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் அவர்களின் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மெரினா கடற்கரை சம்பவம் குறித்து கழகத்தின் சார்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் முறையான விசாரணை இன்றி கழக நிர்வாகிகளை காவல்துறையினர்  கைது செய்திருப்பதுகண்டனத்திற்குரியது. அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல், சொந்தக்கட்சி தொண்டர்களையே குண்டர்களை வைத்து தாக்கும் நிலைக்குச் சென்றிருப்பதை நாடறியும்.

அதையெல்லாம் மறைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீது வீண்பழி சுமத்தி, தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையியல், முறையான விசாரணை எதுவும் நடத்தாமல், சென்னை மாநகராட்சி 114 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு.சுதாகர், 114 மேற்கு வட்ட கழக செயலாளர் திரு.அற்புதராஜ், 63 தெற்கு வட்ட கழக செயலாளர் திரு.மதுசூதனன் ஆகியோரை எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் இன்று அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கழக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காவல்துறையினர் இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது என்? உள்நோக்கத்தோடு வன்முறையைத் தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன?’ என தெரிவித்துள்ளார்.