Childcare : குழந்தைகளின் கண்ணுக்கு மை போடுவது நல்லதா..? கெட்டதா..?

பெற்றோர்கள் தங்களது குழந்தையை எந்த வகையில் அழகுபடுத்த முடியும் என்று தான் பார்ப்பர். தங்களது குழந்தைகளை பார்த்து, பார்த்து அழகுபடுத்துவர். இது பெற்றோர்களின் குணம் என்றாலும், அவர்களை அழகுபடுத்தும் முறை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

அந்த வகையில் பெற்றோர் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு கண்மை பயன்படுத்துகின்றனர். நாம் அழகுக்காக குழந்தைகளுக்கு மை பயப்படுத்துவது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும். குழந்தைகளுக்கு மை போடுவதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி பார்ப்போம்.

குழந்தைகளுக்கு கண்ணில் மை போடுவதால்,  கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.  குறிப்பாக அவை இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படவில்லை என்றால் இந்த பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும்.

இந்த கண் மையில், ஈயம் என்ற பொருள் உள்ளது. இது குழந்தைகளின் கண்ணில் ஒவ்வாமை, கண் சிவப்பு நிறமாக மாறுதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளின் கண்ணுக்கு மை போடுவதை தவிர்க்கலாம்.

நமது வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு கண் படாமல், காத்து கருப்பு அண்டாமல் இருக்க இவ்வாறு செய்ய வேண்டும் என கூறுவர். அந்த சமயங்களில் குழந்தையின் பாதத்தில் இந்த கண் மையை வைக்கலாம். சில சமயங்களில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக நமது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுப்படுவதை தவிர்த்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிறந்தது.