IPL 2018:கண்டிப்பா பொல்லார்ட் அதுக்காக வருத்தப்பட்டார்!உண்மையை உடைத்த ரோகித் சர்மா!

ஐபிஎல் கிரிக்கெட்டில்  பஞ்சாப் அணிக்கு எதிரான  போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். அந்த ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அக்ஸார் பட்டேல் களமிறங்கினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.

ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மும்பை அணி தக்கவைத்து கொண்டது.

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா ’ இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. என்னவெல்லாம் எதிர்பார்த்தோமோ, அதை எங்கள் வீரர்கள் செய்து முடித்தார்கள். அது எளிதானதும் அல்ல. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதும் இங்கு அதிக ஸ்கோர் எடுக்க முடியும் என்பதும் தெரியும். இருந்தும் மிடிலில் நாங்கள் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதும் எங்கள் அணிக்கு மேட்ச் வின்னராக இருந்துகொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளில் அவரை விட்டுவிட்டு விளையாடினோம். அது எப்போதும் கடினமான முடிவுதான். ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாததற்கு வருத்தப்பட்டார் அவர். டுமினி கடைசிக்கட்ட ஓவர்களில் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாததால் பொல்லார்டுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க நினைத்தோம். அவர் அழுத்தமான சூழ்நிலைகளில் எப்போதும் நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவர் இந்தப் போட்டியில் விக்கெட் வீத்தியது எளிதான விஷயம் இல்லை. பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டு பந்துவீசினார்’.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment