கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!

சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை  இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது.

அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த ஹெலிகாப்டர்கள் கடத்தப்பட்ட கப்பலை சுற்றி வளைத்தன. இதையடுத்து மீன்பிடி கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் தப்பியோடினர்.

அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல்…மறுப்பு தெரிவித்த ஈரான்..!

மீன்பிடி கப்பலில் பணியாளர்கள் உட்பட 17 பேர் பத்தரமாக மீட்கப்பட்டனர். செங்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் பதட்டமான பகுதிகளில் இந்திய கடற்படையானது கண்காணிப்பை முடுக்கிவிட்டு தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 10 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கிய பின்னர், செங்கடலில் வணிகக் கப்பலில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து தாக்கி வருகின்றனர். ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து பல கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக செல்வதை நிறுத்திவிட்டன.

Leave a Comment