#ICCWOMEN’ST20WORLDCUP: மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி அட்டவணைகள் வெளியீடு!!

மகளிர் டி-20 உலகக்கோப்பை 2023 போட்டிக்கான அட்டவணைகளை வெளியிட்டது ஐசிசி.

எட்டாவது ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகளை ஐசிசி நேற்று வெளியிட்டது. தகுதிச்சுற்று போட்டிகள் கேப் டவுன், பார்ல் மற்றும் க்கெபர்ஹா ஆகிய நகரங்களிலும், நாக் அவுட் போட்டிகள் கேப்டவுனில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இறுதிப்போட்டி பிப்-26 ஆம் தேதி நடைபெறும், அன்று ஏதாவது குறுக்கீடு ஏற்பட்டால் பிப்-27 ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 1 & குரூப் 2 என, 5 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.    5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீ லங்கா, பங்களாதேஷ் ஆகிய 5 அணிகளும் குரூப் 1 இல் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2இல் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தானை பிப்-12 இல் எதிர்கொள்கிறது. பிப்-21 வரை நடைபெறும் தகுதிச்சுற்றுப்போட்டிகளில், குரூப்பில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற 4அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும், முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டிகள் பிப்-23 இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment