காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுகிறது.! கர்நாடகாவில் பிரதமர் மோடி பேச்சு.!

நான் நாட்டின் வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துகிறேன். அதே நேரத்தில் சிலர் (காங்கிரஸ்) எனக்கு கல்லறை தோண்டுகிறார்கள். – பிரதமர் மோடி பேச்சு. 

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி பிரதான அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாண்டியாவில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

நான்கு வழிச்சாலை :

பிரதமர் மோடி நேற்று பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெங்களூரு – மைசூர் விரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து திறந்து வைத்தார். மேலும், மைசூர் – குஷால்நகர் நான்கு வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இரட்டை எஞ்சின் அரசாங்கம் :

அதற்கு பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனக்களித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும், இரட்டை எஞ்சின் அரசாங்கமானது மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் எனவும், கர்நாடக மக்களுக்கு இரட்டை எஞ்சின் அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பகுதி என குறிப்பிட்டார். அதாவது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி. கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

நாட்டின் உட்கட்டமைப்பு :

மேலும் பேசிய அவர், மைசூர் பெங்களூரு விரைவு சாலை பற்றி நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என குறிப்பிட்டார். இதன் மூலம் பயண நேரம் பாதியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தினால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும், நாட்டின் உட்கட்டமைப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதை சுட்டி காட்டினார். இந்த ஆண்டு நாட்டின் உள்கட்டமைப்புக்கு மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கல்லறை :

அடுத்ததாக, காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து பேசினார். பிரதமர் நாட்டின் வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துவதாகவும், அதே நேரத்தில் சிலர் (காங்கிரஸ்) தனக்கு கல்லறை தோண்டுவதாகவும் பிரதமர் மோடிவிமர்சித்து பேசினார். இருந்தாலும், தனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் இந்திய மக்களின் ஆசீர்வாதம் பாதுகாப்பு கவசம் போல இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, கர்நாடகத்தின் வேகமான வளர்ச்சிக்கு இரட்டை எஞ்சின் அரசாங்கம் அவசியம் என தனது பிரச்சாரத்தையும் முன் வைத்தார் பிரதமர் மோடி.

Leave a Comment