ஐபிஎல் 2024 : கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி..!

ஐபிஎல் 2024 :  டெல்லி அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர்.

இதில் ஆட்டம் தொடங்கியது முதல் சுனில் நரேன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இதனால் கொல்கத்தா அணி பவர் பிளேவில் 1 விக்கெட் இழந்து 88 ரன்கள் குவித்தனர். இதில் சுனில் நரேன் 21 பந்தில் 4 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 52 ரன்கள் குவித்து அரைசதம் பூர்த்தி செய்தார்.  மறுபுறம் விளையாடி வந்த சால்ட் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அங்கிரிஷ் ரகுவன்ஷி அவரும் களமிறங்கியது அதிரடி ஆட்டத்தை விளையாடினார்.

சுனில் நரேன், ரகுவன்ஷி இருவரும் டெல்லி  அணி பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இவர்கள் கூட்டணியை பிரிக்க டெல்லி  அணி திணறியது. இதற்கிடையில் சுனில் நரேன் 85 ரன்கள் இருந்தபோது ரிஷப் பந்திடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் கூட்டணியில் 104 ரன்கள் சேர்க்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் ரகுவன்ஷி அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரஸ்ஸல் தனது பங்கிற்கு 19 பந்தில் 41 ரன்கள் குவித்தார். கடைசியில் இறங்கிய ரிங்கு சிங் 8 பந்தில் 26 ரன்கள் குவிக்க இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் குவித்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக அன்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டையும், இஷாந்த் சர்மா  2 விக்கெட்டையும் பறித்தனர்.

273 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.  தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 18,  டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்த களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காமல் மிட்செல் மார்ஷ்,  அபிஷேக் போரல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

கேப்டன் ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடி வந்தனர்.  இருப்பினும் ரிஷப் பந்த் 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்த 2 பந்தில் ரசிகர்களுக்கு நம்பிக்கையாக இருந்த ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேற மறுமுனையில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 பந்தில் அரைசதம் விளாசி 54 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக  டெல்லி அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டையும்,  மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டை பறித்தனர்.

கொல்கத்தா இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றியும், 2 தோல்வியை பெற்றுள்ளது.