Halwa : அவலில் அல்வா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் பல வகை உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அல்வா என்றாலே அதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், நாம் கடையில் விலை கொடுத்து அல்வா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான முறையில், திருப்தியாக செய்து சாப்பிடலாம்.

தற்போது இந்த பதில் அவலை செய்யக்கூடிய அல்வா பற்றி பார்ப்போம். அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல் என பல வகை உண்டு. அவலில் வைட்டமின் பி, இரும்பு, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த அவலில் குழந்தைகளுக்கு பிடித்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • அவல் – 1 கப்
  • தேங்காய் பால் – 2 கப்
  • கருப்பட்டி – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேங்காயை துருவி அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து, இரண்டு கப் பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் அவலை போட்டு தூளாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் அரைத்து வைத்துள்ள அவலை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பில் கடாயை வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை தூளாக பொடித்து போட்டு பாணியாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த பாணியில் கலந்து வைத்துள்ள அவல் மற்றும் தேங்காய் பால் கலவையை அதனுள் போட்டு கட்டிப்படாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்பு ஏலக்காய் தூள் மற்றும் சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி ஒரு தட்டில் நெய் தடவி அதில் செய்து வைத்துள்ள  அல்வாவை பரப்பி வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அல்வாவை துண்டு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

நாம் அவளை பல்வேறு வகையில் உணவுகளாக செய்து சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் இவ்வாறு அல்வாவாக செய்து கொடுக்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.