அரசுப் பேருந்து மோதி விபத்து.! இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் காத்திருந்த நடைமேடையில், மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடைமேடையில் இருந்த ஒரு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்மற்றும் இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து கூறிய பேருந்து நிலையத்தின் டிப்போ மேலாளர், “பேருந்தின் டிரைவர் ரிவர்ஸ் கியருக்கு பதிலாக டிரைவர் தவறுதலாக தவறான கியரை இயக்கியதால், பயணிகள் காத்திருந்த நடைமேடையில் ஏறி, அங்கிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் 3 பேர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.” என்று கூறியுள்ளார்.

பேருந்து பிளாட்பாரம் 12ல் இருந்து குண்டூருக்கு புறப்பட இருந்ததாகவும், ஆனால் நிறுத்தப்பட்டிருக்கும்போது பேருந்தின் பிரேக் பழுதாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் துவாரகா திருமல ராவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். பிரேக்குகள் செயலிழந்தாகவும், ​​ஓட்டுனர் ரிவர்ஸ் கியருக்குப் பதிலாக தவறான கியரை இயக்கியதாகவும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. விசாரணையில் என்ன நடந்தது என்பது தெரியவரும். இனி பேருந்து நிலையத்திற்குள் இதுபோன்ற விபத்துகள் நடக்காது,

“ஏனெனில் பேருந்து நிலையத்திற்குள் ஓட்டுநர்கள் பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இறந்தவர்களுக்கு உடனடியாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் நாங்கள் ஏற்கிறோம்” என்று திருமல ராவ் தெரிவித்தார்.

மேலும், இந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, விஜயவாடா பேருந்து நிலையத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், இதுகுறித்து விசாரணை நடத்தி காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.