மரம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர்..! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா  உயிரிழந்துள்ளார்.

மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், 2 கார்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, அங்கு மரத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் திருமதி கவிதா அவர்கள் கனமழை காரணமாக மரம் ஒன்று திடீர் சாய்ந்ததில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும், போக்குவரத்துக் காவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

பெண் காவலரை உயிரிழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைஞ்சுகிறேன். எல்லாம் வல்ல இறைவனை

காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் போக்குவரத்துக் காவலர் விரைவில் பூரண நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.