விவசாயிகள் போராட்டம்.! டெல்லி மைதானத்தில் சிறைச்சாலை.. அனுமதி மறுத்த மாநில அரசு.!

விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, எல்லை பகுதிகள் மற்றும் சாலைகளில் கான்கிரீட், இரும்புவேலிகள் அமைத்து இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி… விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!

இதனால், டெல்லி முழுவதும் உச்சகட்ட பதற்றத்தில் காணப்படுகிறது. டெல்லி – அம்பாலா எல்லையில் சாம்பு என்ற இடத்தில் விவசாயிகள் பேரணியாக வருவதால், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் பேரணி முன்னேறி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லி பாவனா மைதானத்தை சிறைச்சாலையாக் மாற்றி விவசாயிகளை அடைத்து வைக்க மத்திய அரசு அனுமதி கேட்டது. ஆனால், மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு டெல்லி உள்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

மத்திய அரசின் கோரிக்கை குறித்து, டெல்லி அரசின் உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியதாவது, விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன உரிமை உள்ளது. எனவே விவசாயிகளைக் கைது செய்தது தவறானது என்றுள்ளார்.

Leave a Comment