தடுத்தாலும் அமைதி வழியில் போராடுவோம்-காங்கிரஸ் தலைவர் கார்கே.!

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இதனையடுத்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி அனுமதி டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். மேலும் போராட்டம் நடக்கவிருந்த ராஜ்காட் பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” காவல் துறையினர் தடுத்தாலும் அமைதி வழியில் நாங்கள் போராட்டத்தை நடத்துவோம். என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” எனவும் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்க பாஜக முயற்சிப்பதாக கார்கே குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ராஜ்காட்டில் நடத்தும் இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Comment