ஜம்மு காஷ்மீரில் விடாது பெய்யும் கனமழை… போக்குவரத்து தடை.. நிலச்சரிவு.. வெள்ள பாதிப்பு..!

Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வட்டி வதைக்கும் சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் கனமழை வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக, ஜீலம் நதியின் துணை நதியான சீலு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குப்வாரா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் பாதிக்கப்பட்ட சுமார் 336 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளான ரியாசி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சில கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வடக்கு காஷ்மீர் பகுதியான பூஞ்ச் மாவட்ட பகுதியில் வெள்ள பாதிப்பு காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் அங்கு பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இவ்வாறு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கும் சூழல் நிலவுகிறது. பொது சொத்துக்களை சீர் செய்யும் முயற்சியிலும் , பொதுமக்களை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கும் முயற்சியிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.