காய்கறி, மளிகை விலையேற்றம்… பாஜக அலுவலகம் முன் போராடிய மகளிர் காங்கிரஸார் கைது.!

விலையேற்றத்தை கண்டித்து பாஜக அலுவலகம் முன் போராடிய மகளிர் காங்கிரஸ் கட்சியினரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மகளிர்  பிரிவினர் நேற்று போராட்டம் நடத்தினர். மகளிர் காங்கிரஸ் பிரிவு தலைவர் நெட்டா டிசோசா தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களையும், தக்காளிக்கு மாலை அணிவித்து போராட்டத்திலும், தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை கலைத்தனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏனென்றால் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மகளிர் போலீசார் வரவில்லை. அதற்கு பதிலாக ஆண்கள் போலீசார் தான் வந்தார்கள் என தெரிகிறது. இதனை குறிப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை விதிகளை மீறி செயல்படுகிறது. போராட்டக்காரர்களை மோடி அரசு மிரட்டி தாக்குகிறது. அத்யாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்து போராடியவர்களை சகித்துக் கொள்ள முடியாமல் பெண்கள் மகளிர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய ஆண் காவல்துறை அதிகாரிகளை அனுப்பியுள்ளனர் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய் ராம் ரமேஷ் கண்டனம் பதிவு செய்துள்ளார்.