காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பதில் அளித்து உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரும்பான்மையுடன் 2 முறை மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது. குடும்ப அரசியல், எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் அகற்றி உள்ளார். 2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திரமோடி உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ்.

நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்களுக்கு அனைத்தும் தெரியும். நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர். நாட்டு மக்களுக்காக பிரதமர் ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணிநேரம் உழைத்து வருகிறார். காங்கிரஸை போல் ஊழல் செய்யாமல், மக்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம்.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பரப்புரை செய்தவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ். ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்த 13 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி, இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார்; உலகளவில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திரமோடி.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

வட கிழக்கு மாநிலங்களுக்கு முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை; அங்கு அனைத்து தரப்பு வளர்ச்சியையும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம்; எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியலாக்குவது மேலும் அவமானம்.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர். மே மாதம் மட்டும் மணிப்பூர் கலவரத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட இடையராத முயற்சிகளை மேற்கொண்டோம். கலவரம் ஏற்பட்டதும் துணை ராணுவ படை உடனடியாக குவிக்கப்பட்டது. முந்தைய காலங்களில் மணிப்பூரில் கலவரம் நடந்த போது பிரதமர்கள் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மணிப்பூர் முதல்வர் பிரச்சனைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு தந்ததால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் நள்ளிரவு மூன்று மணிக்கு கூட பிரதமர் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினார். மணிப்பூரில் வன்முறை படிப்படியாக குறைந்து வருகிறது. உணவுப் பொருட்கள், மருந்துகள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், கடும் சவால்களுக்கிடையே எரிபொருட்கள் உள்ளிட்ட  பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்க்கு முன் வெளியானது. பெண்கள் வன்கொடுமை தொடர்பான வீடியோவை போலீசாரிடம் வழங்கி இருக்கலாமே? வீடியோவை காவல்துறையிடம் வழங்கியிருந்தால் அப்போதே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்போம்.

பெண்கள் வன்கொடுமை தொடர்பான வீடியோ விவகாரத்தில் ஒன்பது பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர துணை ராணுவ படையினர் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் நான் தங்கியிருந்த மூன்று நாட்களில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தோம் என டெஹ்ரிவித்துள்ளார்.