உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்.? புதிய அட்டவணையை வெளியிடும் பிசிசிஐ.?

இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அட்டவணையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என தகவல்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை கடந்த மாதம் 27ம் தேதி ஐசிசி வெளியிட்டது. ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அக்டோபர் 5-ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி நவம்பர் 19-இல் இதே அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

உலகக்கோப்பை – இந்தியா vs பாகிஸ்தான்:

இந்தியாவின் முதல் போட்டி அக்டோபர்  8-ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. மிக முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தானுடன் அக்டோபர் 15 இல் குஜராத் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதுகிறது என உலகக்கோப்பை அட்டவணையில் தெரிவிக்கப்படடிருந்தது.

10 நகரங்கள்:

உலகக்கோப்பை போட்டிகளில் ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள், ஹைதராபாத், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அட்டவணையில் மாற்றம்?

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரின் அட்டவணையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய் ஷா கூறுகையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஒருசில போட்டிகளின் தேதிகளை மாற்ற பிசிசிஐக்கு பரிந்துரைகள் வந்துள்ளது. இதனால், அட்டவணையில் மாற்றங்கள் எதிர்பாக்கலாம், உறுப்பினர் குழுவின் வேண்டுகோளுக்குப் பிறகு தேதிகளில் மாற்றம் செய்யப்படும்.

இடங்கள் மாற்றப்படாது:

இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு குறிப்பிட்டது மட்டுமல்ல என்றும் ஏற்கனவே தேர்வு செய்த இடங்கள் மாற்றப்படாது எனவும் கூறியுள்ளார். 2023 ODI உலகக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா இவ்வாறு கூறியுள்ளார். இதனால், உலகக்கோப்பை அட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் செய்து பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

நவராத்திரி பண்டிகை:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நாளில் தொடங்கும் இந்து பண்டிகையான நவராத்திரி காரணமாக போட்டி நாளில் குஜராத் காவல்துறையால் பாதுகாப்பை வழங்க முடியாததால் விளையாட்டு ஒரு நாளுக்கு முந்தையதாக மாற்றப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜஸ்பிரித் பும்ரா:

இந்த விழா இந்தியா முழுவதும், குறிப்பாக குஜராத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது, இதனால் பாதுகாப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும், இதுகுறித்து, பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன எனவும் கூறப்படுகிறது. ஜெய் ஷா மேலும் கூறுகையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதியுடன் இருப்பதாகவும், ஆக.18 முதல் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்றார்.