#Breaking:”தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்க”- 237 வழக்கறிஞர்கள் கடிதம்!

சென்னை:தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தின் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்தது.

இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவர்களின் பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அக்கடிதத்தில்,அவர்கள் கூறியிருப்பதாவது:

“துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றும்போது அதன் நோக்கத்தை அறிய நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது.

அதன்படி,75 நீதிபகள் கொண்ட ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை,மிகச்சிறிய மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.எனவே,தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவர்களின் பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும்,கொலிஜியம் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி எடுத்த முடிவை நவம்பர் மாதம் அறிவித்தது குறித்தும் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொலீஜியம் என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே.