எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு… மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.! கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி பேட்டி.!

மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ள நிலையில், கூட்டத்தொடர் துவங்கும் முன் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் நிறைவேற்ற ஆளும் கட்சியும், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனால் இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

இந்நிலையில் , கூட்டத்தொடர் துவங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் விவாதிக்க உள்ளனர் என்று நம்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று, இந்த ஜனநாயகக் கோவி;லான நாடாளுமன்றம் கூடும் நாள். இன்று அனைத்து எம்.பிக்களும் ஒன்றிணைந்து, இதனை மக்களின் அதிகபட்ச நலனுக்காக பயன்படுத்தி, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தொடரில் மசோதாக்கள் மீதான வாதங்கள் எவ்வளவு ஆழமாக நடைபெறுகிறதோ, அவ்வளவு சிறந்த முடிவுகள் நமக்கு கிடைக்கும். தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார். இன்று அரசின் நிகழ்ச்சி நிரலில் 31 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.

அடுத்ததாக மணிப்பூர் கலவரம் பற்றியும், மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்துச்சென்ற ஒரு கொடூர நிகழ்வு பற்றி பிரதமர் மோடி பேசுகையில், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் எனக்கு வலியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் நமது சமூகத்திற்கு வெட்கக்கேடானது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. இதற்குப் பின்னால் இருந்தவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.

இந்த வெட்கக்கேடான சம்பவத்தை யார் செய்தார்கள், யார் பொறுப்பு என்பது வேறு பிரச்சினை ஆனால் இந்த சம்பவம் நம் தேசத்தை அவமானப்படுத்தியுள்ளது. மாநில முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க வேண்டும். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, சத்தீஸ்கராக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி. மணிப்பூர் சம்பவம் ஒரு பெண்ணின் மான பிரச்சினை. இது எல்லா அரசியலுக்கும் மேலானது என பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.