அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான்., பொறுத்திருந்து பாருங்கள் – டிடிவி தினகரன்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 நாட்கள் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா சென்றுள்ளார். இங்கு ஒரு வாரம் ஓய்வு எடுத்த பிறகு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கோடி பொருத்தப்பட்டு சென்றார். இது அரசியலில் களத்தில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.

அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இதுபோன்று ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்டப்போராட்டத்தை தொடர்வார்கள். மற்றோரு கட்சியை ஆரம்பித்ததே ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தான் அமமுகவை ஆரம்பித்துள்ளோம். இது அவர்களுக்கு புரியும், ஆனால் புரியாத மாதிரி நடிப்பார்கள். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை பயன்படுத்தவும் சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.