உலக லெவன் அணிக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட்இண்டீஸ்..!

ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கெய்ல் நிதானமாக விளையாட, லெவிஸ் அதிரடியில் இறங்கினார். இதனால் 6 ஓவர்களில் ஸ்கோர் 51-ஐ எட்டியது.
அதிரடியாக விளையாடிய லெவிஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். 8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் லெவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதைத்தொடர்ந்து ஆண்ட்ரே பிளச்சர் களமிறங்கினார். வெஸ்ட்இண்டீஸ் அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது.
11-வது ஓவரை ஷோயிப் மாலிக் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் 28 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேய்ல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்கினார். அப்ரிடி வீசிய 12-வது ஓவரின் 2-வது பந்தில் ஆண்ட்ரே பிளச்சர் ஆட்டமிழந்தார். அதன்பின் தினேஷ் ராம்தின் களமிறங்கினார்.
15 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி ரன் குவித்த சாமுவேல்ஸ் 22 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அடங்கும். அதைத்தொடர்ந்து ரசல் களமிறங்கினார். இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. ராம்தின் 44 ரன்களுடனும் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்), ரசல் 21 ரன்களுடனும் (3 சிக்ஸர்) களத்தில் இருந்தனர்.
உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்துள்ளது.

Leave a Comment