சிவகங்கை அருகே உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு!

தமிழக அரசு,கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிவகங்கையை அடுத்துள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், கடந்த திங்கள்கிழமை இரவு, குறிப்பிட்ட பிரிவினர், மற்றொரு பிரிவைச் சேர்ந்த 9 பேரை வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டினர்.

இதில், சண்முகநாதன், மருது மற்றும் ஆறுமுகம் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களது உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை மாலை வரை பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்காமல் கிராமத்தினர், உறவினர்கள், மற்றும் தலித் அமைப்புகளைச் சேர்ந்த பலர் திரளாக கூடி, நிபந்தனைகளை வலியுறுத்தி மதுரையில் கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆவரங்காடு, கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த 5 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் கச்சநத்தம் படுகொலைகளில் கொல்லப்பட்டு உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அதனை ரூ.15 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment