‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக மக்களை சந்திக்க தயாராக இல்லை. ஆன்லைன் அரசியலுக்கு வந்து விட்டனர். கொரோனா பரவலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஆன்லைன் அரசியல் செய்து வருகின்றது. அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் திமுக சுயமாக சிந்திக்கவில்லை. திமுக தானாக இயங்கவில்லை. பிரசாந்த் கிஷோர் குழுவின் மூலம் இயக்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது. அதிமுக சுயமாக இயங்கக்கூடிய இயக்கம். எங்களை யாராலும் இயக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.  சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது திமுக என்று கூறியுள்ளார்.

மேலும், அரசியல் அனுபவம் உள்ள திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் போன்றோர் இதை எல்லாம் மன கசப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். அதிமுகவில் செயற்குழு கூட்டம் கூட தேதி அறிவிக்க வேண்டும் என்றால் கூட ஜனநாயக ரீதியாக அழைத்து பேசி அறிவிக்கும் நிலை உள்ளது. இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மொழி கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.