77வது சுதந்திர தினம்… டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்… என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் தெரியுமா.? 

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது நாட்டில் 77வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

டெல்லியில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தலைமையேற்று, தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அந்தசமயம் ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் பிரதமருக்கு மரியாதை செலுத்தப்படும்.

வரும் ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி , செங்கோட்டையின் லாகூர் கேட் முன்பு பிரதமர் நரேந்திர மோடி வரும் போது, அவரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்வர்.

சல்யூட்டிங் தளத்திற்கு அழைத்துச் செல்லபட்ட பிரதமர் மோடிக்கு, அங்கு முப்படை வீரர்கள் மற்றும் போலீஸ் காவலர்கள் பிரதமர் மோடிக்கு பொது வணக்கத்தை வழங்குவார்கள். அதன்பிறகு, பிரதமர் மரியாதை நிமித்தமாக பார்வையிடுவார். பிரதமருக்கான மரியாதைக் காவலர் குழுவில் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார்.

விழாவைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த சமயம் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் வானில் இருந்து மலர்கள் தூவப்படும். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்படும்.

இந்த நிகழ்விற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றுவார். பிரதமர் உரை முடிந்த உடனேயே தேசிய கீதம் பாடுதல் மற்றும் இறுதியில் மூவர்ண பலூன்கள் வானத்தில் விடப்படும்.

மாலையில், குடியரசு தலைவர் மாளிகையில், இந்திய ஜனாதிபதியால் வரவேற்பு அளிக்கப்படும். வழக்கமான நெறிமுறை அழைப்பாளர்களைத் தவிர பலதரப்பட்ட விருந்தினர்கள் அங்கு இருப்பார்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், பத்ம விருது பெற்றவர்கள், கல்வித்துறையில் முதலிடம் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் நாடு முழுவதும் உள்ள பலர் அந்த விழாவில் கலந்து கொள்வர்.

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா கலந்துகொள்ள உள்ளார். ரோ கன்னா தலைமையிலான தூதுக்குழுவில் மைக்கேல் வால்ட்ஸும் அடங்குவர். இவர்கள் இருவரும் இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்கள் மீதான இரு கட்சி காங்கிரஸ் காகஸின் இணைத் தலைவர்கள்.

இந்தியா முழுவதிலுமிருந்து 1,800 சிறப்பு விருந்தினர்கள்அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஆண்டு புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலந்துகொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.