உலகக்கோப்பை தொடக்க போட்டிக்கு 3,500 போலீசார் பாதுகாப்பு!

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் 13ஆவது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில், 10 அணிகள், 48 போட்டிகள் என இந்தியாவில் அடுத்த ஒன்றரை மாதம் களைகட்ட உள்ளது உலகக்கோப்பை தொடர்.

அதன்படி, உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். லீக் போட்டிகளின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பிரம்மண்டமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று நடைபெறும் தொடக்க போட்டியின் பாதுகாப்பு பணியில் சுமார் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதில் 3 கூடுதல் கமிஷனர்கள், 13 டி.சி.பி அந்தஸ்து உள்ள அதிகாரிகள், 18 ஏ.சி.பி க்கள் உட்பட 3500 போலீசார் உள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், 500 ஊர்க்காவல்படையினர், 9 வெடிகுண்டை செயலிழக்க செய்யும் குழுக்களும் பணியில் உள்ளனர். அதேவேளையில் மைதானத்தை சுற்றி போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதனை போலீசாரின் சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பார்க்கிங் ஏரியா மற்றும் ஸ்டேடியத்தின் மெட்ரோ ஸ்டேஷன் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் ஸ்டேடியத்தின் உள்புறம் மாற்றும் வெளிப்புறம் என  பல்வேறு அடுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.