விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 30 ஆயிரமும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும்- ஓபிஎஸ் ..!

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வடகிழக்கு பருவ மழையினால் பெருத்த பயிர்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், இதற்கென அமைக்கப்பட்ட குழு ஆய்ந்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்தப் பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் நவம்பர் மாதம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற தற்போதைய முதலமைச்சரின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நானும் 19-11-2021 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அதற்கு இதுநாள் வரை எவ்விதப் பதிலும் தரப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், பயிர்ச் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக எவ்வித இடுபொருட்களும் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இதுநாள் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் இதுவரை எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது அனைவர் மத்தியிலும் ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்குப் பருவமழை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களுக்கான இழப்பீடு இன்னமும் சென்றடையவில்லை என்பது வேதனை அளிக்கும் செயலாகும்.

மத்திய அரசிடம் இருந்து நிதி வரும்வரை காத்திருக்காமல் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

GO