மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை!

எனது தலைமையிலான ஆட்சிக்காலம் உயர் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என முதலமைச்சர் நம்பிக்கை.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது தான் சென்னை பல்கலைக்கழகம். ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை செய்து கொண்டியிருக்கிறது தமிழக அரசு.  வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞரும் கூற கூடாது என்ற நிலையை உருவாக்கி வருகிறது தமிழக அரசு.

நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும் மாணவர்கள் நலன் கருதி உதவி தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு 2010- முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு மாணவர்களுக்கான அரசு என்று சொல்லி கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். பெற்றோர்களின் எண்ணங்களை மாணவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான முதல் சொத்து கல்வி மட்டுமே, மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்கலைக்கழகங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

காமராஜர் ஆட்சி காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம், கலைஞர் ஆட்சி காலம் கல்லூரி கல்வியின் பொற்காலம். எனது தலைமையிலான ஆட்சியில் உயர் கல்வியின் பொற்காலமாக ஆக வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். திருநங்கைகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் இலவசமாக கல்வி வழங்கப்பட உள்ளது. 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை கல்வியில் சமூகநீதி பாடம் விருப்ப பாடங்களாக சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Comment