இந்தியா கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு .! தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்து செயல்பட்டு வர்கின்றனர். இந்த கூட்டணிக்கு இந்தியா ( I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance ) இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரிஷ் பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்தியா என பெயர் வைப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தேவையில்லாத குழப்பத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்த முயற்சி செய்கின்றன என்றும்,

இதன் மூலம் இந்தியா எனும் கூட்டணியும், பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிராக இருப்பது போல குறிப்பிட்டு , இந்திய நாட்டிற்கு எதிராக பிரதமர் மோடி கூட்டணி இருக்கிறது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என கிரிஷ் பரத்வாஜ் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், 26 எதிர்க்கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவை இந்தியா கூட்டணி பெயர் குறித்து பதில் அளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்பி  உத்தரவிட்டனர்.