குடியரசு தினம் 2024: அணிவகுப்புக்கான நேரம் முதல் சிறப்பு விருந்தினர் வரை முழு விவரங்கள்!

நாட்டின் 75 – ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் குடியரசு தினம் நெருங்கி விட்டது, இந்த நாளை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், குடியரசு தின விழா அன்று டெல்லியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்புகள் நடத்தவுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நடைபெற்று வரும் அணிவகுப்புகள் இந்தாண்டும் கோலாகலமாக நடைபெற உள்ளது.  இதில், விமானப்படை அணிவகுப்பின் போது பிரமிக்க வைக்கும் ஸ்கை ஷோக்கள், ஒவ்வொரு மாநிலத்தின் உணர்வும், நாட்டின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் நடைபெற உள்ளது. புது தில்லியில் உள்ள கர்தவ்யாவில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையும் நடைபெற்றது. பொதுவாக குடியரசு தின விழா அணிவகுப்பு பாதுகாப்புத் துறை வாகனங்களுடன் தொடங்கும்.

முதல் முறையாக குடியரசுத் தின அணி வகுப்பு ‘போருக்கு அழைப்பு’ என்கிற போா் முரசு கருவிகள் இசைக்கும் நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. இந்த ‘போா் அழைப்பு’ இசை நிகழ்ச்சி பெண்களால் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற உள்ள அணிவகுப்பின் நேரம், டிக்கெட் விலை, தலைமை விருந்தினர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

முதலில் தேசம்.. நாட்டிற்காக எதனையும் செய்ய வேண்டும்.! மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு.!

அணிவகுப்பு நேரம்: குடியரசு தின அணிவகுப்பு ஜனவரி 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து கர்தவ்யா பாதை வரை நடைபெற உள்ளது. பார்வையாளர் அரங்கில் சுமார் 77,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதி உள்ளது. அதில் 42,000 இருக்கைகள் பொது மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின தலைமை விருந்தினர்: இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நாளை ஜெய்ப்பூர் வரும் இம்மானுவேல் மேக்ரான், ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹவா மஹாலுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இதன் பின்னர் இரவு அதிபர் மேக்ரான், ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். பின்னர் ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியின் ‘அட் ஹோம்’ வரவேற்பில் கலந்துகொள்வார்.

டிக்கெட் விலை: டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்புபுகளை பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ.20, ரூ.100, ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின அணி வகுப்புகளை பார்க்க விரும்புவோர்,  பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சென்று, பெயர், மின்னஞ்சல் ஐடி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.