45 ஆண்டுகளில் முதன் முறையாக தாஜ்மகாலை தொட்ட யமுனை நதிநீர்..!

யமுனை நதியின் நீர்மட்டம் 45 ஆண்டுகளில் முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவர்களைத் தொட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய கட்டத்தை தாண்டி 205.35 மீட்டரை எட்டியதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுராவின் ஓக்லா மற்றும் கோகுல் ஆகிய இரண்டு தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போதைய நீர் மட்டம் அபாய அளவை விட 15 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. மலைப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால், நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், யமுனை நதியின் நீர்மட்டம் 45 ஆண்டுகளில் முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவர்களைத் தொட்டுள்ளது. தற்பொழுது, ஆக்ராவில் நீர்மட்டம் 495.8 அடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக, 1978ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதுதான் யமுனை நதியின் நீர் தாஜ்மஹால் சுவரைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறிய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) பாதுகாப்பு உதவியாளர் வாஜ்பாய், தாஜ்மஹால் வடிவமைப்பு வெள்ளத்தைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தின் போது கூட, தாஜ்மஹால் உட்புறம் தண்ணீர் நுழைவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

மேலும். ஆக்ராவின் நகராட்சி ஆணையர் அங்கித் கண்டேல்வால், கடந்த 3 நாட்களாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.