செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும்.? நாளை மீண்டும் விசாரணை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. தற்போது அவர் அமலாக்கத்துறை விசாரணை காவலில் இருக்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் இளங்கோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை எம்.பி – எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கானது ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை யார் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளங்கோ வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபத்தில் சுந்தர் – சக்திவேல் அடங்கிய அமர்வு, யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தான் தீர்மானிப்பார். அதனால் அவரிடம் முறையிடலாம். அல்லது, ஏற்கனவே செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் முறையிடலாம் என கூறப்பட்டது.

இன்று நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யவில்லை என்பதால், நாளை செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான மனுவை விசாரிக்க சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட உள்ளது.