I.N.D.I.A : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் நோக்கம் என்ன.? இந்தியா கூட்டணி கேள்வி.!

வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தியா எனும் பெயரை எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வைத்துள்ள காரணத்தாலோ என்னவோ தற்போது பாஜக இந்தியா எனும் பெயரை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தையும் முன்னிறுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், திடீரெனெ நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் , இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்பது கூடுதல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் இந்த சிறப்பு கூட்டத்தொடரை எப்படி எதிர்கொள்வது என எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று கூட டெல்லியில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கேள்வி நேரம் இல்லாத நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு கேள்விகளை எழுப்புவது என சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடர் முடிந்ததும், இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசுகையில், எதற்காக இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.