பிரதமர் மோடியின் உரையை… தடுத்து நிறுத்திய மேற்கு வங்க போலீசார்..!

தேசிய வாக்காளர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.

நாடு முழுவதும் உள்ள 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை பாரத ஜனதா யுவ மோர்ச்சா பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது.

உங்களின் கனவே எனது லட்சியம்.. இதுவே மோடியின் வாக்குறுதி – டெல்லியில் பிரதமர் உரை!

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய நிழ்ச்சியை பொது இடத்தில் வைத்து பாஜக சார்பில் திரையிடப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் பிரதமர் மோடி பேசி வந்த நிகழ்ச்சியை திரையிட கூடாது என தடுத்து நிறுத்தியதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ” மம்தா பானர்ஜியின் அறிவுறுத்தலின் பேரில், வங்காளம் முழுவதும், சரியான அனுமதிகள் இருந்தபோதிலும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, முதல் முறையாக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் உரையை திரையிடுவதை மேற்கு வங்க போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜனநாயகத்தை குலைத்த மம்தா பானர்ஜிக்கு அவமானம்” என பதிவிட்டுள்ளார்.