செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்.. 3 கப்பல்கள், 10 பேர் உயிரிழப்பு..!

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு, செங்கடல் மற்றும் அரபிக்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களில்  தொடர்ந்து கப்பல் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று செங்கடலில் வணிகக்கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலை அமெரிக்க கடற்படை முறியடித்து அதன் மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 பேரை கொன்றது.

அமெரிக்கா கடற்படை இதுகுறித்து கூறுகையில்,  சிங்கப்பூர் கொடியுடன் வந்த வணிகக் கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதாக அமெரிக்க ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும், அமெரிக்கா உடனடியாக தனது போர்க்கப்பல்களை அந்த இடத்திற்கு அனுப்பியது. அப்போது யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இரண்டு ஏவுகணைகளை அழித்தது.

அதன் பிறகு, அந்த சிங்கப்பூர் கப்பல் தெற்கு செங்கடலை சென்றபோது நேற்று காலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கப்பலைத் தாக்கினர். தனது போர்க்கப்பல்களுடன் ராணுவ ஹெலிகாப்டர்களை அந்த இடத்திற்கு அனுப்பியபோது, ​​ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் தற்காப்புக்காக தனது பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் சுமார் 10 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது மூன்று படகுகளும் மூழ்கியதாகவும் அமெரிக்கா கூறியது. 

அந்த இடத்தில் இருந்து ஒரு படகு தப்பி சென்றது. இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து செங்கடலில் அனைத்து கப்பல் போக்குவரத்தும் 48 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவின் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். கப்பலின் ஊழியர்கள் எச்சரிக்கை அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்ததால் தாக்குதல் நடத்தியதாகவும், இதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல்  செங்கடல் மற்றும் அரபிக்கடலின் சர்வதேச கப்பல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் மீது 23 தாக்குதல்கள் நடந்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராகவும் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.