UPI ATM: இனி பணம் ஏடிஎம் கார்டு தேவை இல்லை.! யுபிஐ மட்டும் போதும்.!

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில் வங்கி பரிமாற்றங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் பேமெண்ட், ஆன்லைன் வாலட் போன்ற பேமெண்ட் முறைகள் உள்ளது. இதில் ஒரு சில மக்கள் பேங்க் மற்றும் ஏடிஎம்க்குச் சென்று நேரடியாகப் பணத்தை எடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பயன்படுத்துகின்றனர்.

யுபிஐ:

இந்தியாவில் நடக்கும் அனைத்து சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 75 சதவீதத்திற்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை உள்ளது. இது சுமார் 330 மில்லியன் தனிப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த யுபிஐ பயன்பாடுகளின் பட்டியலில் போன்பே, கூகுள்பே மற்றும் பேடிஎம் போன்ற பரிவர்த்தனை செயலிகள் முன்னணியில் உள்ளன. 70 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்கள் 256 மில்லியன் க்யூஆர் (QR) குறியீடுகளைப் பயன்படுத்தி யுபிஐயைப் பயன்படுத்துகின்றனர்.

ஏடிஎம்மிலும் யுபிஐ:

இந்நிலையில், தற்போது ஏடிஎம்மிலும் டெபிட் கார்டு இல்லாமலும் கூட, யுபிஐ-ஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானில் உள்ள ஹிட்டாச்சி லிமிடெட்டின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து, ஹிட்டாச்சி மனி ஸ்பாட் யுபிஐ ஏடிஎம்மை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்கள் தங்கள் மொபைலில் இருக்கும் யுபிஐ பேமெண்ட் அப்பை பயன்படுத்தி க்யூஆர் (QR) குறியீடு மூலம் பணத்தை எடுக்க முடியும். இந்த யுபிஐ ஏடிஎம் மூலம் தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இந்த யுபிஐ ஏடிஎம் (UPI ATM) ஆனது இன்னும் பொது பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு பணம் எடுப்பது.?

  • இதில் பணம் எடுப்பதற்கு முதலில் ஏடிஎம்மில் இருக்கும் “யுபிஐ கார்ட்லெஸ் கேஸ்”  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்ற ஆப்ஷன் காட்டப்படும். அதில் உங்களுக்கு தேவையான தொகையை உள்ளிட வேண்டும்.
  • இதன் பிறகு அதில் ஒரு க்யூஆர் குறியீடு தோன்றும். அந்தக் குறியீட்டை உங்கள் மொபைலில் இருக்கும் யுபிஐ ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • அதை ஸ்கேன் செய்த பிறகு எந்த பேங்க் அக்கவுண்டில் இருந்து எடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து விட்டு ப்ரோசிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு ஏடிஎம்மில் வழக்கம்போல் நடைபெறும் செயல்பாடுகள் நடைபெற்று, உங்களது பணம் உங்கள் கையில் கிடைக்கும்.

இது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை விட இது மிகவும் வசதியானது. இதற்கு உங்கள் டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை விட இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் வேகமானது. இதற்கிடையில், யுபிஐ ஆனது, 2023ல் முதல் முறையாக 10 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்துள்ளது.

அதன்படி, முந்தைய மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் பணப்பரிவர்த்தனையானது 10 பில்லியனைக் கடந்துள்ளது. இது ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையை விட தோராயமாக 2 பில்லியன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.