திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவின் உடலை பெற்றுக்கொண்டனர்!

சிறையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு  அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதனை தொடர்ந்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காமராஜை தேடி பிடித்து கைது செய்தனர். காமராஜ் மீது உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே செயல்படுதல், பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆய்வாளர் காமராஜ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு உத்தரவிட்டார்.

அதேசமயம், இந்த வழக்கில் போலீசார் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் ராஜா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக உஷா உடல் வைக்கப்பட்டிருந்த திருச்சி அரசு மருத்துவமனை முன் உறவினர்களும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் திரண்டனர். காவல் ஆய்வாளர் காமராஜ் மீதான வழக்கை 302 என்ற பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றவும் காமராஜை பணிநீக்கம் செய்து அதுதொடர்பான ஆணையை தங்களிடம் காட்டவும் வலியுறுத்தினர். அதுவரை உடலைப் பெறவும், கலைந்து செல்லவும் மறுத்து அவர்கள் பிரேதப் பரிசோதனைக் கூடம் முன்பு  அமர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும், ஆய்வாளர் காமராஜை பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உஷாவின் உறவினர்கள் முன்வைத்தனர். இதனை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, மாலை 5.20 மணியளவில் உஷாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உஷாவின் உடலை அவரது கணவர் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். பின்னர் உஷாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி சுந்தரராஜன் நகரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதற்கு பிறகு அடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment