ரயில் விபத்து! 3,000 யூனிட் ரத்த தானம் அளித்த ஒடிசா இளைஞர்கள்!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,000 யூனிட் ரத்தம் தானம்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் மூன்று ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ரயில் விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர், விபத்தில் காயமடைந்த கிட்டத்தட்ட 650 பயணிகள் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக். கட்டக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரயில் விபத்தை தொடர்ந்து, இளைஞர்கள் உள்ளிட்ட அம்மாவட்ட உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக, ஒடிஸாவை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

இரத்த தானம் செய்ய, மருத்துவமனையில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு பலரும் நன்றிகளை தெரிவித்து, தழைக்கட்டும் மனிதநேயம் என தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,000 யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய கட்டாக் SCB மருத்துவக் கல்லூரி டாக்டர் ஜெயந்த் பாண்டா, நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்தனர். நேற்று இரவு முதல் கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய பகுதிகளில் 3000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது என்றார்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒடிசா மக்கள் உதவிகளை செய்து வருகிறார்கள். பால்சோர் மற்றும் பத்ரக் அரசு மருத்துவமனைகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரத்தம் தானம் செய்து வரும் நிலையில், இதுவரை 3,000 யூனிட் யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது  என்பது மனித நேயத்தின் உச்சம் என்றே கூறலாம்.