சசிகலா தனது காரை மாற்றியதற்கு காரணம் இதுதானாம் – டிடிவி தினகரன் விளக்கம்

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் பணி தொடரும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

பெங்களூரில் இருந்து இன்று காலை சென்னை புறப்பட்ட சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பொருத்தப்பட்டு பயணித்து வந்தார். ஓசூர் ஜூஜூ வாடி பகுதியில் சசிகலா காரில் பொருத்தப்பட்ட அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. பின்னர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காருக்கு மாறிய சசிகலா, அந்த காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் எல்லை வந்தடைந்தார். சசிகலாவுக்கு வழியெங்கும் அமமுக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் பிரமாண்ட உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிமுக கொடியுடன் தமிழகத்துக்கு வந்தால் நடவடிக்கை என காவல் துறை கூறியதை அடுத்து, தமிழக எல்லைக்கு வந்த பிறகு அதிமுக உறுப்பினர் காரில் ஏறி சசிகலா சென்னைக்கு பயணம் செய்து வருகிறார் என கூறப்பட்டது. தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு வரும் வழியிலேயே கிருஷ்ணகிரி காவல்துறை நோட்டீஸ் வழங்கியது. இந்த நிலையில், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார்.

உடனடியாக வேறு கார் இல்லாததால் அதிமுக ஒன்றிய செயலாளரின் காரில் சசிகலா தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார். சம்மங்கி என்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னமாவுக்கு வரவேற்பு கொடுத்தார். அமமுக தொண்டர்கள் யாரும் அதிமுக கொடியை பிடிக்கமாட்டார்கள். சின்னம்மாவை வரவேற்க வந்த அதிமுக தொண்டர்கள் தான் கொடி பிடித்துள்ளனர் என கூறியுள்ளார். சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும். காவல்துறை நடுநிலையுடன் செயல்படாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவார்கள் என கூறியுள்ளார்.