இதனை தி.மு.க. அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை – டிடிவி தினகரன்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் ட்வீட்.

நேற்று, திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

இந்த சம்பவம் தற்போது பேசும் பொருளாகியுள்ள நிலையில்,இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment