இது தானா சேர்ந்த கூட்டம் – ஒரே மேடையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்…!

ஓபிஎஸ் அவர்கள் கோடநாட்டில்,  ஜெயலலிதா மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேனியில் கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஜெயலாலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் ஒரே மேடையில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பேசுகையில், அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள். அன்று அம்மாவின் வேட்பாளராக வந்தபோது இருந்தவர்களில், 90% பேர் நம்மோடு தான் இருக்கிறார்கள். 10 சதவிகிதத்தினர் வெளியே போயிருக்கலாம். அம்மாவின் தொண்டர்கள், எதற்கும் விலை போகாத தொண்டர்கள் எங்கள் இருவரின் பின்னால் திரண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இங்கே கூடியிருக்கும் கூட்டம் தானாக கூடிய கூட்டம்.

அம்மா அவர்கள் மிகவும் நேசித்து, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சென்று தங்கிய கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்திற்கு காரணமானவர்கள் யார் என அம்மாவின் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில், ஆட்சிப்பொறுப்பேற்று 90 நாட்களில் கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையிலடைப்போம். அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர்களை விட மாட்டோம் என தெரிவித்தனர்.

ஆனால், ஆட்சி பொறுப்பிற்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம் போல் இந்த வாக்குறுதியையும் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார்கள். கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிவக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஈபிஎஸ்-யிடம் இருப்பது குண்டர் படை, டெண்டர் படை. அவர்களுக்கு தொண்டர்களின் விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்களுக்கு துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள். அவர்கள் அச்சாணி முறிந்து போனவர்கள். நாங்கள் இருவரும் இணைந்திருப்பது சுயநலத்திற்காக அல்ல. எங்களது ஒரே எண்ணம் அதிமுக கட்சி மற்றும் சின்னதை துரோகத்தால் அபகரித்ததை மீட்டு தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதே.

கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, திரு ஸ்டாலின் அவர்கள் இதை விரைவாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.