கோவா விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை..! -விமான நிலைய இயக்குநர் விளக்கம்.!

மாஸ்கோ-கோவா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவா ஏடிசிக்கு (Air Traffic Control) க்கு நேற்று மாஸ்கோவிலிருந்து கோவா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானம் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்து விமானத்தை உள்ளூர் அதிகாரிகள், போலிசார் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை (BDDS) விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

விமானத்தில் இருந்த 236 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட 244 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானத்தில் உள்ள அனைத்து பைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் சோதனைகள் முடிந்த நிலையில் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என ஜாம்நகர் விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த விமானம் காலை 10:30 முதல் 11 மணிக்குள் ஜாம்நகரில் இருந்து கோவாவுக்கு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment