அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற காவலை நீக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் மற்றும் தலைமை செயலக அறைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதனை அடுத்து 18 மணிநேரத்திற்கு பின்னர் நேற்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பிற்பகலில் அவர் உடல்நிலை கருத்தில் கொண்டு நீதிபத்தில் அல்லி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவரிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்று, பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, ஜூன் 28 வரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த நீதிமன்ற காவலை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது. அதே போல நீக்க கூடாது என அமலாக்கத்துறையும் கோரிக்கை வைத்து இருந்தது. இதனை தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த நீதிமன்ற காவலை நீக்க கோரிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்ட மனுவும், அதே போல செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஜாமீன் அளிக்கப்பட்டால், அமலாக்கதுறை மனு தள்ளுபடியாகும். இல்லையென்றால் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறார்.