சிறுமி டான்யாவுக்கு வீட்டு மனை பட்டா.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.!

சிறுமி டான்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர்களிடம் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் மகளின் முகச்சிதைவு நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சிறுமி டானியாவுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க ஏற்பாடு செய்து. இந்த சிகிச்சை பலனாக தற்போது பள்ளிக்கு சென்று வரும் அளவுக்கு முகச்சிதைவு நோயில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார் சிறுமி டான்யா.

இந்நிலையில் சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனை பட்டா மற்றும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி கட்டும் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் உள்ள வீடு கட்டிக் கொள்ள அனுமதி உள்ளிட்டவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியாவுக்கு நேரில் வழங்கினார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம்பெற்ற சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டாவும், அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொள்வதற்கான அனுமதி ஆணையினையும் வழங்கினேன். டானியாவின் வாழ்விலும் முகத்திலும் புன்னகை என்றும் குடிகொள்ளட்டும்! என பதிவிட்டுள்ளார்.