கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை… முதல் புகைப்படம் வெளியானது!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர்.

கடந்த 16ம் தேதி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கிய நிலையில், திறப்பு விழா வரை இந்த பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறியிருந்தார்.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!

இந்த சூழலில், கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடைகொண்ட குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், கோயில் கருவறையில் நேற்று மாலை நிறுவப்பட்டது. ஐந்து தலைமுறை புகழ்பெற்ற சிற்பிகளின் குடும்ப பின்னணியைக் கொண்ட மைசூரு வாசியால் செதுக்கப்பட்ட 51 அங்குல குழந்தை ராமர் சிலை புதன்கிழமை கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த கோயிலில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார். நேற்று மாலை கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலைக்கு கணேச – அம்பிகா பூஜை, வருண பூஜை உள்ளிட்ட பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன.

இந்த சிலையின் கண்கள் மற்றும் உடம்பு துணியால் மூடப்பட்டுள்ளது. திறப்பு விழா அன்று ராமர் சிலையில் கட்டப்பட்டுள்ள இந்த துணி அகற்றப்பட்டு, பிரதிஷ்டை பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில், ராமர் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊடகப் பொறுப்பாளர் சரத் சர்மா பகிர்ந்துள்ளார்.