பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் ஏற்கமுடியாது; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.!

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இணையத்தில் வெளியான கொடூர வீடியோ அனைவரையும் உலுக்கியுள்ளது.

இந்த வீடியோவில் மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி அழைத்து செல்லும் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு நடந்த இந்த கொடூரத்தை ஏற்கமுடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநில அரசும், மத்திய அரசும் பெண்களுக்கு எதிராக நடந்த இந்த சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறினால் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உச்சநீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.