ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது – ஜோதிமணி எம்பி

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன்படி, இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பதிவான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இதனால், அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. ஒருபோதும் உண்மை தோற்காது, நீதி அழியாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தலைவர் ராகுல் காந்தி அவர்கள், அதானி, நரேந்திரமோடி அவர்களின் ஊழலை அம்பலப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்தில் அச்சமற்ற அரசியலை முன்னெடுத்ததால், அவர் நாடாளுமன்றத்திற்குள் வரக்கூடாது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக கூடாது என சதி செய்து அவருக்கு இந்த அநீதியை இழைத்தார்கள். எங்களது நெருக்கடியான காலத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.