கர்நாடகா முதலமைச்சராகிறார் சித்தராமையா! இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதலமைச்சர், துணை முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு வெளியாகும் என தகவல்.

கர்நாடக மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முதல்வர் என்று தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே பரஸ்பர முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சித்தராமையா அமைச்சரவையில் துணை முதலமைச்சராக டிகே சிவகுமார் பதவியேற்கிறார். இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன், சித்தராமையா, டிகே சிவகுமார் கூட்டாக சந்தித்தனர். நேற்று தனித்தனியே கார்கேவை சந்தித்த இருவரும் இன்று ஒரே காரில் சென்று சந்தித்துள்ளனர். கர்நாடக முதலமைச்சர் தேர்வில் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து இருவரும் ஒன்றாக சென்று கார்கேவை சந்தித்துள்ளனர்.

கர்நாடக மக்களுக்கு முன்னேற்றம், நலன் மற்றும் சமூக நீதியை ஏற்படுத்த காங்கிரஸ் அணி உறுதியாக உள்ளது என்றும் 6.5 கோடி கன்னடர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்றுவோம் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தராமையா, டிகே சிவகுமார் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் முதல்வர், துணை முதல்வர் தேர்வு உறுதியாகியுள்ளது.