செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கவில்லை – அமலாக்கத்துறை தகவல்

செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தகவல்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் தகவல் கூறியுள்ளார்.

8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இருதய அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது ஜூன் 21-ல் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.