தோசைக்கு சாம்பார் தரவில்லை.! உணவகத்திற்கு நீதிமன்றம் அபராதம்..!

பீகாரில் தோசைக்கு சாம்பார் தராததால் உணவகத்திற்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் பக்ஸரில் உள்ள ஒரு உணவகத்தில் மணீஷ் பதக் என்ற வழக்கறிஞர் ஒருவர் ரூ.140 மதிப்பிலான மசாலா தோசை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பிறகு தனது ஆர்டரை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்சலை திறந்து பார்த்தபோது தோசையுடன் இருக்கக் கூடிய சாம்பார் இல்லாமல் இருந்துள்ளது.

பிறகு, நேரடியாக உணவகத்திற்கு சென்று உரிமையாளரிடம் புகாரளித்ததோடு, நோட்டீஸும் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு உணவகத்தின் உரிமையாளர் சரியான பதில் அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணீஷ் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் பக்கம் உள்ள நீதியை மையமாக வைத்து, அவரது உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.2,000 அபராதமும், நீதிமன்ற செலவுக்கு ரூ.1,500 அபராதமும் விதித்தது. இந்த அபராத தொகையை செலுத்த உணவகத்திற்கு 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதத் தொகைக்கு 8% வட்டி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த சம்பவமானது கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதற்கு 11 மாத விசாரணைக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.