பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு..!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியீட்டு இருந்தது.

மேலும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் ரூ.238,92, கோடி செலவினம் ஏற்படும் என  அரசாணையில் விவரமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்,  பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் எனவும் ரூ.1000 நியாய விலை கடைகளில் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.  மேலும் பொங்கலுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10-ம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக 15ஆம் தேதி அனுப்பப்படும் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதி அன்று வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனக்கூறி பொங்கல் பரிசு தொகை 3,000 வழங்கவேண்டும் 1,000 வழங்கவேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதேபோல ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.