அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நாஞ்சில் கோலப்பன் நீக்கம் – ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நாஞ்சில் K.S. கோலப்பனை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த  ஆடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக மூத்த தலைவர்களை விமர்சித்து பேசுவது போன்று ஆடியோ வெளியிட்டப்பட்டது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் ஆடியோவை வெளியிட்டு விவகாரத்தில் நாஞ்சில் கோலப்பன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், கழக அமைப்புச் செயலாளர், நாஞ்சில் கோலப்பன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கூறியுள்ளார்.